Sunday, October 17

ஆறு கடமைகள்

 

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)அவர்கள்


அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. (அதாவது ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன)

""அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று வினவப்பட்டது. அண்ணலார் பதிலளித்தார்கள்: ""நீர் உம் முஸ்லிம் சகோதரரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் உரைப்பதும், அவர் உம்மை விருந்துக்கு அழைக்கும்போது அவ்வழைப்பை ஏற்றுக் கொள்வதும், அவருக்கு நீர் நலம் நாடிட(அறிவுரை கூறிட) வேண்டும் என்று அவர் விரும்பும்போது அவருக்கு நீர் நலம் நாடுவதும் (அறிவுரை கூறுவதும்), அவருக்குத் தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால் அதற்கு நீர் பதில் கூறுவதும், அவர் நோயுற்றுவிட்டால், அவரை நலம் விசாரிப்பதும், அவர் இறந்து விட்டால் அவருடைய "ஜனாஸா'வுடன் செல்வதும் தான் அவருக்கு உம்மீதுள்ள உரிமைகளாகும். (அதாவது அவருக்கு நீர் ஆற்றவேண்டிய கடமைகளாகும்)'' (முஸ்லிம்)

 1. "ஸலாம்' உரைப்பதன் பொருள் வெறுமனே "அஸ்ஸலாமு அலைக்கும்' எனும் சொற்களை மொழிந்து விடுவதல்ல. "ஸலாம்' உரைப்பது ""என் தரப்பிலிருந்து உம் உயிர், உடைமை, மானம் ஆகிய அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன; நான் எந்த வழியிலும் உமக்கு எந்தத் துன்பமும் இழைத்திட மாட்டேன்; அல்லாஹ் உம் தீனையும்(நெறியையும்), ஈமானையும்(நம்பிக்கையையும்) பாதுகாப்பாக வைக்கட்டும். இன்னும் உம்மீது அல்லாஹ் தனது கருணையைப் பொழிந்திட நான் பிரார்த்தனையும் செய்கின்றேன்,'' எனப் பிரகடனமும் வாக்குமூலமும் அளிப்பது.

2. தும்மலுக்கு பதில் கூறுதல் என்பதன் பொருள் தும்முபவனுக்கு நலம் நாடும் வார்த்தைகள் கூறுவதாகும். தும்முகிறவர் "புகழ் அனைத்தும் இறைவனுக்கே!' எனக் கூறுகின்றார். இதைக் கேட்கும் சகோதரர் "யர்ஹமுகல்லாஹ்' என்று அவருடன் சேர்ந்து பிரார்த்திக்கிறார். அதாவது ""அல்லாஹ் உம் மீது கருணை பொழியட்டும்; மேலும், தனக்கு அடிபணியும் பாதையில் உம் பாதங்களை அல்லாஹ் உறுதியாக நிலைபெறச் செய்வானாக! மேலும் மற்றவர் எள்ளி நகையாடிட வாய்ப்பளிக்கும் எந்தத் தவறும் உம்மிடம் நிகழாதிருக்குமாக!'' எனும் பொருள்பட அவருடன் சேர்ந்து பிரார்த்திக்கின்றார்.

அறிவிப்பாளர்: உக்பா பின் ஆமிர்(ரலி)அவர்கள்

நான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ""ஒரு முஸ்லிம் அடுத்த முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்; எனவே, ஒரு முஸ்லிம் தம் சகோதரருக்கு ஒரு பொருளை விற்கும் போது, அதில் குறை இருந்தால் அந்தக் குறையைத் தெளிவாக எடுத்துச் சொல்லி

விடட்டும். குறையை மறைப்பது ஒரு முஸ்லிம் வணிகருக்கு கூடாத செயலாகும்.

(இப்னு மாஜா)

அறிவிப்பாளர்; ஆயிஷா(ரலி)அவர்கள்

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

""நற்குணமும், நன்னடத்தையும் உடைய முஸ்லிம்களிடம் எப்போதாவது தவறுகள், பிழைகள் நிகழ்ந்தால் அவற்றை மன்னித்து

விடுங்கள்! இறைவரம்புகளை மீறிய செயலைத் தவிர!'' '(அபூதாவூத்)

 ஒரு மனிதர் நல்லவராகவும், இறையச்சமுடையவராகவும் விளங்குகின்றார்; இறைவனுக்கு மாறு செய்வதில்லை எனில் அத்தகைய மனிதர் எப்போதாவது தவறிப்போய், ஒரு பாவத்தில் வீழ்ந்து விட்டால், அதன்

காரணத்தால் அவரை உங்கள் மதிப்பான பார்வையிலிருந்து வீழ்த்திவிடாதீர்கள். அவரைக் கண்ணியக் குறைவாக நடத்தாதீர்கள். அவருடைய அந்தத் தவறைப் பரப்பித் திரியாதீர்கள். மாறாக, அவரை மன்னித்து விடுங்கள். அவர் ஷரீஅத்தில் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பாவத்தைச் செய்து விட்டால் மன்னிக்கப்பட மாட்டாது.(எடுத்துக்காட்டாக விபச்சாரம், திருட்டு போன்றவை)
 
 
நன்றி......................

1 comment:

  1. salaam maams,

    I am Wishing & Welcoming you to the world of blogs, and expecting more from you, may Allah bless you. All the best
    (Remove the word verification)

    ReplyDelete